ஆகஸ்டு, செப்டம்பரில் நன்றாக மழை பெய்யும்: இந்திய வானிலை மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      இந்தியா
Meteorological Center Delhi

ஆகஸ்டு மற்றும் செப்டம்பரில் நன்றாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை மற்றும் வட கிழக்கு பருவ மழை என 2 பருவ மழை காலங்கள் உள்ளன. இரு பருவ மழை காலத்திலும் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும். இதில், தென் மேற்கு பருவ மழை ஜூன் மாதத்திலும், வட கிழக்கு பருவ மழை அக்டோபர் மாதத்திலும் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை வழக்கமான நாளில் தொடங்கியது. ஆனாலும், ஜூன், ஜூலை ஆகிய 2 மாதங்களில் பெய்த மழை அளவு சராசரியை விட 9 சதவீதம் குறைவாக உள்ளது. ஒருசில இடங்களில் மட்டும் சராசரிக்கு அதிகமாக மழை பெய்து இருக்கிறது. அதாவது தென்மேற்கு பருவ மழை காலம் 50 சதவீதம் முடிந்து விட்டது. அடுத்து ஆகஸ்டு (இந்த மாதம்), செப்டம்பர் என 2 மாத காலங்கள் உள்ளன. இந்த 2 மாதத்திலும் ஓரளவு நன்றாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

பொதுவாக இந்த 2 மாத காலத்தில் சராசரியாக 42.83 செ.மீட்டர் மழை பெய்யும். இந்த சராசரிக்கு 8 சதவீதம் வரை அதிகமாகவோ அல்லது 8 சதவீதம் வரை குறைவாகவோ மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் கணித்துள்ளனர். ஆகஸ்டு மாதத்தில் சராசரி அளவை ஒப்பிடும் போது, 99 சதவீதம் வரை மழை பெய்யலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை சராசரியை ஒட்டியே இருக்கும். சராசரியில் இருந்து 94 சதவீதம் முதல் 106 சதவீதம் வரை மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு வங்காள விரிகுடா பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால் அடுத்த 2 வாரத்துக்கு மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதுவரை பெய்துள்ள மழையின்படி சிக்கிம் மாநிலத்தில் மட்டும் சராசரியை விட அதிகமாக மழை பெய்துள்ளது. தமிழ்நாடு, குஜராத், கேரளா, ஒடிசா, மேற்கு வங்காளம், இமாச்சல பிரதேசம் டெல்லி, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் சராசரியை விட குறைவாக மழை பெய்துள்ளது. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் சராசரி அளவுக்கு சற்று குறைவாகவோ அல்லது அதிகமாகவோ மழை பெய்து இருக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் மழை சரியாக பெய்யவில்லை. அங்கு 60 சதவீதம் வரை மழை குறைவாக பெய்துள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து