முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் ஆழ்துளை கிணற்று நீரை நிரப்ப ஐகோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை ஆழ்துளைக் கிணற்று நீரைக் கொண்டு நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொற்றாமரைக் குளத்தின் நீர் இளம்பச்சை நிறத்தில் இருப்பதால், அந்த நீரை அனந்தசரஸ் குளத்தில் ஊற்றினால், குளத்தில் பாசி படிய வாய்ப்பிருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளித்திருந்தது. இந்த அறிக்கையை ஏற்று, சென்னை ஐகோர்ட் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

40 ஆண்டுகளுக்குப் பின்னர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. அத்திவரதர் சிலை 48 நாட்கள் வெளியே வைக்கப்பட்டு மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் சனிக்கிழமை இரவு சயன கோலத்தில் வைக்கப்பட்டது.

இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டில் அசோகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அனந்தசரஸ் குளத்தை ஆழமாக தூர்வார வேண்டும் என்றும், ஒருவேளை தவறி விட்டால், குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண் மற்றும் நிரப்பப்படவுள்ள தண்ணீர் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், அத்திவரதர் சிலை வைக்கப்படும் குளத்தை நிரப்ப 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். மேலும் கோயிலின் பொற்றாமரைக் குளத்து தண்ணீர் குடிப்பதற்கு கூட தகுதியானது என ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பொற்றாமரைக் குளத்தில் உள்ள தண்ணீருடன் சேர்ந்து ஆழ்துளைக் கிணற்று நீரையும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. 

அப்போது இந்துசமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.மகாராஜா, அனந்தசரஸ் குளத்தை சுத்தம் செய்யும் பணிகளில் உள்ளூர் மக்கள் அறநிலையத் துறையுடன் இணைந்து சிறப்பாகப் பணியாற்றி 90 சதவீத பணிகளை செய்து முடித்துள்ளனர். எஞ்சியுள்ள பணிகளை இரவோடு இரவாக முடிக்க அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை கண்காணிக்க பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அனந்தசரஸ் குளத்தின் இறுதிக்கட்ட பணிகளையும் நாங்களே முடித்துக் கொள்கிறோம். மேலும் கடந்த சில நாள்களாக பெய்த மழையின் காரணமாக அத்திவரதர் சிலை வைக்கப்படும் அறைக்குள் தானாகவே நீர் சுரந்து வருவதாக தெரிவித்தார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அனந்தசரஸ் குளத்தை நீங்களே தூர்வாரி முழுமையாக சுத்தம் செய்தால் நல்லது தான்.

மேலும் அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் அறையை சுத்தமான தண்ணீரைக் கொண்டு நிரப்ப வேண்டும். அனந்தசரஸ் குளத்தை எந்த தண்ணீரால் நிரப்ப வேண்டும் என்பது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வரும் 19-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில், பொற்றாமரைக் குளத்து நீரைக் கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்ப வேண்டாம் என்றும், ஆழ்துளைக் கிணற்று நீரை பயன்படுத்தி குளத்தை நிரப்பலாம் என்றும் சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து