தங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019      வர்த்தகம்
gold rate 2019 09 03

சென்னை : சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 168 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.28,632 என்ற நிலையில் விற்பனையானது.

பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த 4-ம் தேதி சவரன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இதே போல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது. அதன் பின்னர், தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ. 28 ஆயிரத்து 800 என்ற நிலையில் சரிந்திருந்தது. ஒரு கிராம் 3600 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 168 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ. 28,632 என்ற அளவில் விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.3579-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் தங்கத்தின் விலை கடந்த 15 நாட்களில் சவரனுக்கு 1488 ரூபாய் குறைந்துள்ளது. இதே போல் கிலோ 54 ஆயிரத்து 800 ரூபாய் வரை உயர்ந்த வெள்ளி விலையும், சரிந்து வருகிறது. நேற்று கிலோவுக்கு மேலும் 500 ரூபாய் சரிந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ. 49 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் 49 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து