முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருப்பு வைக்க கூடாது: வெங்காயத்தை பதுக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் - வியாபாரிகளுக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ - காமராஜ் எச்சரிக்கை

புதன்கிழமை, 6 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வியாபாரிகள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெங்காயத்தை இருப்பு வைக்கக் கூடாது என்றும், பதுக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, காமராஜ் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தலைமை செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, காமராஜ் ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது,

வெங்காயம் விலை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம். இன்னும் இரண்டு நாட்களுக்குள் ஒரு நல்ல செய்தி முதல்வர், துணை முதல்வரின்ஆலோசனையின்படி வெளிவரும். மழைக் காலங்களான நவம்பர் - டிசம்பர் மாதங்களில் வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்ந்து இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. தற்போது நடைபெற்ற கூட்டத்தில் வெங்காய விலை குறைப்பது குறித்தும், பதுக்கல் செய்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இருந்த விலையைக் காட்டிலும் தற்போது 4 ரூபாய் குறைந்துள்ளது. மக்களை பாதுகாப்பதில் எந்த அளவுக்கு அரசு செயல்படுகிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும். 2010-ல் வெங்காய விலை 110 மற்றும் 140 என இருந்தது. அன்றைக்கு தி.மு.க. ஆட்சி இருந்தது. அன்றைய ரூபாய் மதிப்பு எவ்வளவு. இன்றைக்கு ரூபாய் மதிப்பு எவ்வளவு. இதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நாங்கள் அப்படியில்லை. 2011-ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, விலை நிலைபடுத்தும் நிதியத்தை ஏற்படுத்தியிருந்தார். அந்த நிதியம் மூலமாக வெங்காயத்தை குறைந்த விலைக்கு தர வேண்டும் என்று ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதன் மூலம் வெங்காய விலை கட்டுப்படுத்தப்பட்டது. அதே போல ஜெயலலிதா வாரிசாக இருக்கின்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களை அழைத்து ஆலோசனை செய்துள்ளார். அந்த ஆலோசனையில் அடிப்படையில் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும். பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் வெங்காயம் விலை 33 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. நாசிக்கில் இருந்து கொள்முதல் செய்வது தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். குஜராத்தில் மழை பெய்து வருவதால் வெங்காய வரத்து குறைவாக உள்ளது. மற்ற இடங்களிலிருந்தும் வரத்து குறைவாக உள்ளது. இது போன்ற நிலையில் நாம் எப்படி செயல்படலாம் என்பது குறித்து ஆலோசனை செய்துள்ளோம். தேவையான அளவுக்கு கையிருப்பு உள்ளது. நாசிக் வெங்காயத்தை வெளியில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். இதனை நாங்கள் குறைவான விலைக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார்.

தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியதாவது,

மாவட்ட வழங்கல் அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் பல பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். சில்லரை வியாபாரிகள் 10 மெட்ரிக் டன் வெங்காயம்தான் வைத்துக் கொள்ளவேண்டும். மொத்த வியாபாரிகள் 50 மெட்ரிக் டன் வெங்காயம்தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று என்ற உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைக்கு ரூ. 4 விலை குறைந்துள்ளது. முதல்வர் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் நாசிக் சென்றுள்ளார்கள். அங்கிருந்து வெங்காயத்தை வரவைப்பதா, அல்லது கர்நாடகத்திலிருந்து வரவைப்பதா என்று ஆலோசனை செய்து முதல்வரிடம் தெரிவிப்போம். இன்னும் இரண்டு நாட்களில் இது குறித்து நல்ல அறிவிப்பு வெளிவரும். இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து