முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று காலை கோலாகல துவக்க விழா: புதிய தென்காசி மாவட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : புதிய தென்காசி மாவட்டத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி ஆயிரக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும், விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டமும், வேலூர் மாவட்டத்தை திருப்பத்தூர், ராணிப்பேட்டை என இரு மாவட்டங்களாகவும் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் புதிதாக உருவாக்கப்படும் தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக அருண்சுந்தர் தயாளன் நியமனம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து இந்த மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி. மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.

தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழா அங்குள்ள இசக்கி மஹாலில் இன்று காலை 9-30 மணிக்கு நடைபெறுகிறது.  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார். ரூ. 100 கோடி மதி்ப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

புதிய மாவட்ட தொடக்க விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ம.தி.மு.க. பொதுசெயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ, தி.மு.க. எம்.பி.க்கள் தனுஷ் எம்.குமார், ஞானதிரவியம், எம்.எல்.ஏ.க்கள் பூங்கோதை, ஆலடி அருணா, மைதீன்கான், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர், ஏ.எல்.எஸ் லட்சுமணனன் அ.தி.மு.க. எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த் முத்துகருப்பன் , எம்.எல்.ஏ.க்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், முருகையா பாண்டியன், மனோகரன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முடிவில் தென்காசி மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் நன்றி கூறுகின்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து