குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் மாநில அரசுகளால் தனித்து முடிவெடுக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2019      இந்தியா
central govt 2019 08 27

புது டெல்லி : குடியுரிமை சட்ட விவகாரத்தில் மாநில அரசுகளால் தனித்து முடிவெடுக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து சட்டமாகியுள்ளது. ஆனால் இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்கதேசத்தவரின் ஊடுருவலுக்கு எதிராக அசாம் மக்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் எண்ணுகின்றனர். அசாம் மாநிலத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் வங்கதேச இந்து அகதிகள் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அசாம் மற்றும் திரிபுராவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் டயர்களை கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

குடியுரிமைச் சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேற்குவங்கம், கேரளா மற்றும் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்கள் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என தெரிவித்துள்ளன. ஆனால் குடியுரிமைச் சட்டம் மத்திய அரசின் பட்டியலில் மட்டும் இடம்பிடித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பட்டியலில் இருந்தால் மட்டுமே அதில் இருந்து விலக்குப் பெற மாநில அரசுகளால் முடியும். இதனை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்,

குடியுரிமைச் சட்டம் மத்திய அரசின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பட்டியலில் இருந்தால் மட்டுமே அதில் இருந்து விலக்குப் பெற மாநில அரசுகளால் முடியும். இந்த விவகாரத்தில் தனித்து முடிவெடுக்க மாநில அரசுகளால் முடியாது என தெரிவித்துள்ளனர்..

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து