மொழிப்போர் தியாகிகளுக்கு சிலை வைத்தது அம்மா அரசு: இருமொழி கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது - வீரவணக்க நாள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      தமிழகம்
CM Edappadi Speech 2020 01 25

சென்னை : மொழிப்போர் தியாகிகளுக்கு சிலை வைத்தது அம்மா அரசு என்றும், இருமொழி கொள்கையில் அ.தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில்,

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ம் ஆண்டு ஜனவரி 25-ம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் கண்டிராத ஒரு மாபெரும் புரட்சியாகும். அந்தத் தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவது நமது விழுமிய கடமையாகும். அன்னைத் தமிழுக்காக ஆவி துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அ.தி.மு.க. மாணவர் அணியின் சார்பில், 25.1.2020 சனிக்கிழமை அன்று கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் வீரவணக்க நாள் கூட்டங்கள் நடைபெற்றன. சென்னை அரும்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், தமிழை புறந்தள்ளி விட்டு இந்தியை திணிக்க முயன்றார்கள். அதை எதிர்த்து போராடி தாளமுத்து, நடராஜன் ஆகியோர் அன்று உயிர்த்தியாகம் செய்தார்கள். அதே போல கோடம்பாக்கம் சிவலிங்கம் உட்பட ஏராளமான தியாக செம்மல்கள், தியாக சுடர்கள் ஆகியோர் தங்களது இன்னுயிரை நீத்ததற்காக அஞ்சலி செலுத்தும் நாள்தான் இந்த வீரவணக்க நாளாகும் என்று குறிப்பிட்டார். மேலும் இருமொழி கொள்கையில் அம்மா அரசு மிக உறுதியாக இருந்தது. அதே போல் அவரது வழியில் செயல்படும் அ.தி.மு.க. அரசும் இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். தியாகிகளுக்கு சிலை வைத்ததும் அம்மா அரசுதான் என்று குறிப்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தியாகி சின்னசாமி உள்ளிட்டவர்களுக்கு சிலை வைத்ததை சுட்டிக்காட்டினார். மேலும் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான பெரிய நகரம் சென்னைதான் என்றும் அவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டார். சென்னை முழுவதும் இரண்டரை லட்சம் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஊரக வளர்ச்சி துறையில் 104 விருதுகளை தமிழகம் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார்.  இதே போல் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் நடைபெற்ற வீரவணக்க நாள் கூட்டத்தி்ல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். இந்த கூட்டங்களில் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து