தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் நடைபெறும் - ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      தமிழகம்
tanjavore big temple 2020 01 28

மதுரை : தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நடத்தப்படும் என்று ஐகோர்ட் மதுரை கிளையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிகவும் பழமை வாய்ந்த திருத்தலங்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோவிலினுடைய குடமுழுக்கு விழா பிப்ரவரி 5- ம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் அதன் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவானது தமிழில் தான் நடைபெற வேண்டும். சமஸ்கிருத மொழியில் நடத்தக் கூடாது. இது தமிழ் சார்ந்த கோவிலாகும். எனவே அந்த கோவிலில் சமஸ்கிருத மொழியில் குடமுழுக்கு நடத்தக் கூடாது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது. எனவே தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு மனுக்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு பல்வேறு வழக்குகளும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் தஞ்சை  பெரிய கோவில் என்பது தமிழ் சார்ந்த கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற பாரம்பரியம் மிக்க யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கோவில். தமிழ் மொழியிலேயே ஓதங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டுள்ளது. எனவே 5-ம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவும் தமிழில் தான் நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அப்போது தமிழக அரசு, இந்து அறநிலையத்துறை சார்பாக ஒரு அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், தமிழை எக்காரணத்திற்கொண்டும் தமிழக அரசு புறக்கணிக்காது. எனவே சமஸ்கிருதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அதே அளவு தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, தமிழ் வேதம் ஓதுபவர்கள் நியமிக்கப்பட்டு இரு மொழிகளிலுமே குடமுழுக்கு விழா நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து குடமுழுக்கு எந்த மொழிகளில் செய்யப்படும் என்பதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்குக்கு தடை கோரிய மனு மீதான விசாரணை நாளைக்கு(இன்றைக்கு) ஒத்திவைக்கப்பட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து