சபரிமலை வழக்கு: வரும் 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரணை

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2020      ஆன்மிகம்
sabarimala 2020 01 31

சபரிமலையில் பெண்கள் அனுமதிப்பது உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிரான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் 3-ம் தேதி மீண்டும் விசாரிக்கிறது.

இந்த வழக்கில் உள்ள சட்டச் சிக்கல்கள், பிரச்சினைகள், கேள்விகள் குறித்து 4 மூத்த வழக்கறிஞர்கள் கருத்தொற்றுமையுடன் பேசி அறிக்கை அளிக்க நீதிபதிகள் கேட்டிருந்தனர். ஆனால் வழக்கறிஞர்களுக்கு இடையே கருத்தொற்றுமை வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால், நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று கடந்த 2018 செப்டம்பர் 28-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதனை மறு ஆய்வு செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில்  65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 7 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் சபரிமலை வழக்கை 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்றும் ஜனவரி மாதம் 13-ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்றும் சுப்ரீம் கோர்ட் அண்மையில் அறிவித்தது. இதன்படி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ், சந்தானகவுடர், எஸ்.ஏ.நசீர், சுபாஷ் ரெட்டி, கவாய், சூரிய காந்த் ஆகியோர் அடங்கிய 9 நீதிபதிகள் அமர்வு முன்பு கடந்த 13-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் மனுத்தாக்கல் செய்துள்ள 4 மூத்த வழக்கறிஞர்கள் மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்குக் காட்டப்படும் பாகுபாடு, சபரிமலை விவகாரம் ஆகியவை குறித்த பிரச்சினைகளை ஒன்றுகூடி பேசி எங்களிடம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தது. அதை தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் பி.ஆர். காவே, சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது மூத்த வழக்கறிஞர் வி.கிரி வாதிடுகையில், இந்த வழக்கில் வாதிடும் சில வழக்கறிஞர்கள் சட்டபூர்வமான சில விஷயங்களைத் தயார் செய்து அளித்துள்ளோம். அதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், மூத்த நீதிபதிகள் 4 பேரை இந்த வழக்கு தொடர்பாக அமர்ந்து பேசி வழக்கில் உள்ள சட்டச் சிக்கல்கள், பிரச்சினைகள் குறித்து கருத்தொற்றுமையுடன் பேசி அறிக்கை அளியுங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், வழக்கறிஞர்களுக்கு இடையே எந்தவிதமான கருத்தொற்றுமையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான நீதிபதிகள் அமர்வு கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக சட்டச் சிக்கல்கள், பிரச்சினைகளைக் கருத்தொற்றுமையுடன் ஆய்வு செய்து கூறுங்கள் என்று மூத்த வழக்கறிஞர்களிடம் தெரிவித்திருந்தோம். ஆனால், கருத்தொற்றுமை வராதது எங்களுக்கு வேதனையளிக்கிறது. இருப்பினும் இந்த வழக்கில் வாதிடும் மற்ற சில வழக்கறிஞர்கள் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்கள். அதைக் கருத்தில் எடுத்துக் கொண்டு வரும் பிப்ரவரி 3-ம் தேதி 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரிக்கும். அப்போது இந்த வழக்குத் தொடர்பான பிரச்சினைகளை, சிக்கல்களை நீதிபதிகளே முடிவு செய்வார்கள். அதன்பின் விசாரணை எப்போது இருந்து தொடங்கும் என அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து