போக்குவரத்தை நிறுத்திவிட்டு சாலையில் பிரசவம் பார்த்த போலீஸ் அதிகாரி

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      உலகம்
police delivery 2020 02 14

அமெரிக்காவில் போக்குவரத்து மிகுந்த சாலையில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க உதவிய போலீஸ் அதிகாரியின் செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.  

அமெரிக்காவின் உடா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் வேலி (மேற்கு பள்ளத்தாக்கு) நகரின் போலீஸ் அதிகாரி ஜெரேமி டீன். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அந்நகரின் பாங்கெர்டர் நெடுஞ்சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த சாலையில் இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டு தனது போலீஸ் வாகனத்தின் வேகத்தை குறைத்தார்.
 
அதில் ஒரு வாகனத்திற்குள் இருந்து பதற்றத்துடன் வந்த நபர் போலீஸ் வாகனத்தை நிறுத்தினார். ‘எனது மனைவி பிரசவ வலியால் துடிக்கிறார். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே பிரசவம் ஆகிவிடும் போல் தெரிகிறது. மனைவியால் ஏதும் செய்ய இயலவில்லை’ என அந்த நபர் கூறினார்.  உடனே டீன் தனது வாகனத்திற்கு சென்று கையுறைகளை எடுத்து வந்து அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்தார். குழந்தை பிறந்தவுடன் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. பின்னர் தாயும் சேயும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து சற்று நேரம் தடைபட்டது. அதன் பின்னர் டீன் தனது பணிக்கு திரும்பினார். டீனின் இந்த செயலுக்கு அப்பகுதியினரிடையேயும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து