தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020      வர்த்தகம்
gold 2020 02 21

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.32,408 ஆக விற்பனையானது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. அங்குள்ள தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. தொழிற்சாலைகளில் உற்பத்தி இல்லை. இதன் எதிரொலியாக சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் கடந்த 13-ம் தேதி ஆபரண தங்கம் மீண்டும் சவரன் 31,000-ஐ தாண்டி, ரூ. 31,112-க்கு விற்பனையானது. கடந்த 16-ம் தேதி சவரன் ரூ. 31,392-ஐ தொட்டது. 17-ம் தேதி சற்று குறைந்தது.

ஆனால், மீண்டும் கடந்த புதன் கிழமை கிராமுக்கு ரூ. 24 உயர்ந்து ரூ. 3,926-க்கும், சவரனுக்கு ரூ. 192 உயர்ந்து ரூ. 31,408-க்கும் விற்கப்பட்டது. சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.103 கிராம்) தங்கம் 1,612 டாலர் வரை உயர்ந்தது. இதன் எதிரொலியாக சென்னையில் ஆபரண தங்கம் கடந்த புதன் கிழமை கிராமுக்கு ரூ. 39 உயர்ந்து ரூ. 3,965-க்கும், சவரனுக்கு ரூ. 312 அதிகரித்து ரூ. 31,720-க்கும் விற்பனையானது. இதுவே நகை வரலாற்றில் உச்சபட்ச விலையாக கருதப்பட்டது. இந்நிலையில்  நேற்று முன்தினம் சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் 1,614 டாலர் வரை உயர்ந்து, பின்னர் 1,603 டாலர் வரை குறைந்தது. இதற்கேற்ப சென்னையில் ஆபரண தங்கம் நேற்று முன்தினம் காலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து ரூ. 31,840 என்ற புதிய உச்சத்தை எட்டியது. மாலையில் சற்று குறைந்தது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,626 டாலரை தொட்டதை அடுத்து சென்னையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் சவரனுக்கு ரூ. 584 உயர்ந்து ரூ .32,408 விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.73 உயர்ந்து ரூ.4,051-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை புதிய உச்சத்தை கண்டுள்ளது. அதே போல் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 90 காசுகள் உயர்ந்து ரூ.52.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து