கொரோனா பாதிப்பால் சீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டது - பலி எண்ணிக்கை 2,600 - ஐ நெருங்கியது

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2020      உலகம்
corono death 2020 02 25

பீஜிங் : சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,600-ஐ நெருங்கிவிட்ட நிலையில், பல ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக வருடாந்திர நாடாளுமன்ற கூட்டத்தொடரை தள்ளிவைக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,592 ஆக உயர்ந்தது. வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரத்தை தாண்டியது. சுமார் 50 ஆயிரம் பேருக்கு வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

9,915 பேர் இன்னும் மோசமான நிலையில் உள்ளனர். 24,734 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சீன நாடாளுமன்றத்தின் 3 - வது வருடாந்திர கூட்டத்தொடர் மார்ச் மாதம் 5-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. வழக்கமாக 2 வாரங்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், பட்ஜெட் நிறைவேற்றுதல், புதிய கொள்கைகளை சேர்த்தல், புதிய சட்டங்கள் இயற்றுதல் ஆகிய பணிகள் நடைபெறும்.ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகமோசமாக இருப்பதால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை தள்ளிவைக்க ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் நிலைக்குழு உறுப்பினர்கள் கூடி இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தனர்.இப்படி நாடாளுமன்ற கூட்டத்தொடரை தள்ளிவைப்பது வழக்கத்திலேயே இல்லாதது, நாட்டில் சீர்திருத்தங்கள் மேற்கொண்ட பின்னர் இது நடைபெறவில்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். எனவே பல ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக இந்த கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து