வர்த்தகம், பாதுகாப்பு குறித்து டிரம்புடன் விவாதித்தேன்: தீவிரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் கூட்டாக செயல்பட முடிவு: பிரதமர் மோடி

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2020      இந்தியா
donald-trump-narendra-mod 2020 02 25

புது டெல்லி : இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் டெல்லி ஐதராபாத் இல்லத்திற்கு சென்றார். அவர்கள் இருவரையும் அங்கு பிரதமர் மோடி வரவேற்றார். இதைத் தொடர்ந்து இரு தலைவர்கள் மட்டும் தனியாகவும், அதன் பிறகு இரு நாட்டு உயர்நிலைக் குழுவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். டெல்லி ஐதராபாத் மாளிகையில் இரு தரப்பு பேச்சுக்கு பின் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது தனது அழைப்பை ஏற்று டெல்லி வந்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், இந்தியர்கள் அளித்த வரவேற்பு பெருமை அளிக்கிறது என்றார். இந்தியாவை நாங்கள் பெரிதும் நேசிக்கிறோம் என்று கூறிய டிரம்ப், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தன்னை வரவேற்றது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும் இந்திய மக்கள் பிரதமர் மோடியை அதிகம் நேசிப்பதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட்டறிக்கை வெளியிட்டனர். கூட்டறிக்கையில் பிரதமர் மோடி பேசியதாவது,

குடும்பத்துடன் டிரம்ப் இந்தியா வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இருநாடுகளின் மக்களின் முன்னேற்றத்திற்காகவே இந்த உறவு வலுப்படுத்தப்படுகிறது. மக்களை முன்னிலைப்படுத்தியே இந்தியா - அமெரிக்கா உறவு மேம்படும். இந்தியா - அமெரிக்கா உறவை மேம்படுத்த பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினோம்.  உள்நாட்டு பாதுகாப்பு குறித்து முக்கியத்துவம் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இருநாடுகளின் உறவை வலுப்படுத்த ராணுவ ஒத்துழைப்பு அவசியமான ஒன்று. இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் குறித்தும் ஆலோசித்தோம். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   சுகாதாரம், மருத்துவ ஒத்துழைப்பு, அணுமின் உற்பத்தி திட்டங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினோம். தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிராக இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பு அளிக்கப்படும். போதைப் பொருள் விற்பனை, கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை செய்தோம். இரு நாடுகள் இடையே தெளிவான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆலோசனை செய்தோம்.  அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரை மீண்டும் வரவேற்கிறேன். கடந்த 8 மாதங்களில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசுவது இது 5-வது முறையாகும். இவ்வாறு அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி கூட்டறிக்கை வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து