பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2020      உலகம்
Nawaz Sharif 2020 02 26

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஜாமீன் முடிவடைந்து ஆஜராகவில்லை. இதனால் அவரைத் தலைமறைவு குற்றவாளியாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தானின் டான் ஊடகம்,  ஜாமீன் விதிமுறைகளை மீறியதன் காரணமாக நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்த கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் அரசுத் தரப்பில், நவாஸ் ஷெரீப் லண்டனில் உள்ள எந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கிறார் என்றஅறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியதை அடுத்து, அவர் அனுப்பிய மருத்துவச் சான்றிதழை பாகிஸ்தான் மருத்துவ வாரியம் நிராகரித்தது. மேலும் அரசு அவரைத் தலைமறைவு குற்றவாளி என்று அறிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான ஊழல் வழக்கில், அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி நவாஸ் ஷெரீப்புக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு எனக் கருதி சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.இதைத் தொடர்ந்து உடனடியாக ஷெரீப், லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பிய பின், லண்டன் புறப்பட்டுச் சென்றார். லண்டனில் உள்ள சார்லஸ் டவுன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரீப் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாயின. உடல்நலக் குறைவு காரணமாக சுமார் 8 வாரங்களுக்கு நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து