முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மெல்போர்ன் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 

மகளிர் டி20 உலக கோப்பை ஏ பிரிவில் உள்ள  இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய லீக் போட்டி நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் களம் கண்ட இந்தியாவின்  இளம் வீராங்கனை ஷபாலி வெளுத்துக் கட்டி 36 பந்துகளில் 4பவுண்டரி, 3 சிக்சர் விளாசி 46 ரன்னில் ஆட்டமிழந்தார். காயம் காரணமாக ஓய்வில் இருந்து மீண்டும் விளையாட வந்த ஸ்மிரிதி 11, தானியா பாட்டீயா 23, ஜெமீமா ரோட்ரிக்ஸ் 10 என சீரான இடைவெளியில்  விக்கெட்கள் வீழ்ந்தாலும் ரன் உயர்ந்தபடிதான் இருந்தது.

ஆனால் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 1, வேதா கிருஷ்ணமூர்த்தி 6, தீப்தி சர்மா 8 என குறைந்த ரன்னில் ஆட்டமிழக்க, இந்தியா தடுமாறியது.  அதன்பிறகு வந்த ராதா யாதவ் 14, ஷிகா பாண்டே 10 ரன் எடுக்க இந்தியா 20ஓவர் முடிவில்   8விக்கெட் இழப்புக்கு 133ரன் எடுத்தது. அமெலியா கெர், ரோஸ்மேரி மெயர் ஆகியோர் தலா 2, லீ டகுகூ, ஷோபி டெவின், காஸ்பெரேக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து 134ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன்  நியூசிலாந்து களம் கண்டது. தொடக்க வீரர்கள் ரேச்சல் பிரிஸ்ட் 12, கேப்டன் ஷோபி டெவின் 14,  சூசி பேட்ஸ் 6ரன் என அடுத்தது ஆட்டமிழந்து இந்தியாவுக்கு மகிழ்ச்சி அளித்தனர்.

ஆனால் மேடி கிரீன் 24, கேத்தி மார்டின் 25 ரன் என வேகம் காட்டியதால் ஆட்டம் நியூசிலாந்து பக்கம் திரும்பியது. கடைசி 2 ஓவரில் நியூசிலாந்துக்கு 12 பந்துகளில் 34 ரன் தேவைப்பட்டது. பூனம் யாதவ் வீசிய 19வது ஓவரில் அமிலியா  4பவுண்டரிகள் உட்பட  18 ரன் சேர்த்தார். அதனால் கடைசி ஓவரில் அந்த அணிக்கு 16 ரன் தேவை என்ற நிலையில் ஷிகா பண்டே பந்து வீசினார். முதல் பந்தில் ஹெய்லி பவுண்டரி விளாசினார். அடுத்த 3 பந்துகளில் ஒவ்வொன்றாக  3 ரன்  கிடைத்தது. கடைசி 2 பந்துகளில் 9 ரன் தேவை என்ற நிலையில், 5வது பந்தில் அமெலியா அட்டகாசமாக பவுண்டரி அடித்தார். அதனால் ஒரு பந்தில் 5 ரன் எடுத்தால் வெற்றி என்றானது.  எனவே சிக்சர் அடித்தால் வெற்றி என்ற நிலையில்  கடைசி பந்தை சந்தித்தார் அமெலியா. அவர் அடித்த பந்து தரையை தட்டி ஓட ஷிகா அதை பிடித்து ஹெய்லியை ரன் அவுட் செய்தார்.

அதனால் நியூசிலாந்து 20ஓவரில் 6விக்கெட் இழப்புக்கு 129 ரன் மட்டும் எடுக்க, இந்தியா 4 ரன் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.  இந்தியாவின் தீப்தி சர்மா, ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ், ராதா யாதவ் என பந்து  வீசிய அனைவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்து தரப்பில் அமிலியா கெர் 34*(19பந்து, 6பவுண்டரி),  ஹெய்லி ஜென்சன் 11 ரன் எடுத்தனர். தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக்  வெற்றியின் மூலம் இந்தியா முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து