இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் ஆஷஸ் தொடருக்கு இணையானது : டிம் பெய்ன் சொல்கிறார்

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2020      விளையாட்டு
SPORTS-3 2020 04 01

Source: provided

லண்டன் : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஷஸ் தொடரை போன்றதாகும் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கமிட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை அறிமுகம்படுத்தியது. டெஸ்ட் போட்டிகள் விளையாடும் ஒன்பது அணிகள் 2019 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2021 ஜூன் வரை 72 போட்டிகளில் விளையாடும். இதனடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறும்.இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்திரேலியா ஆறு மாதத்திற்கு நாட்டின் எல்லையை மூடியுள்ளது. ஆகவே செப்டம்பர் மாதம்தான் ஆஸ்திரேலியாவில் விளையாட்டு போட்டிகளை பார்க்க முடியும். கொரோனா வைரசின் தொற்று ஒருவேளை முன்னதாகவே கட்டுப்படுத்தப்பட்டால் நிலைமை மாறலாம். இதனால் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி போட்டிகளில் வெற்றி பெற்றால்தான் புள்ளிகள் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை இரு அணிகளும் பிடிக்க முடியும்.மேலும் கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. 

இதற்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா விரும்புகிறது.இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் ஆஷஸ்க்கு இணையானதாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். டிம் பெய்ன் இதுகுறித்து கூறுகையில், நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது வெற்றி பெறுவதற்காக. ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் முக்கியமானது. எங்களுடைய நோக்கம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதுதான். ஆகவே அவர்கள் என்ன செய்தார்கள் என்னதை விட புள்ளிகள் முக்கியமானது, டெஸ்ட் போட்டி முக்கியமானது. ஆகவே கடந்த முறை என்ன நடந்தது என்று நினைக்காமல் தற்போது நடக்க வேண்டியதில் கவனம் செலுத்துவோம்.

தற்போது நாங்கள் மிகவும் வேறுபட்ட அணி. அவர்களுடைய அணியும் சற்று வித்தியாசமானதுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இரண்டும் தரனமான அணிகள். இது மிகவும் எதிர்பார்க்கக்கூடிய தொடராக இருக்கும். ஏனென்றால் இதற்கு முன் இப்படி கிரிக்கெட்டின் தரத்தை பார்க்கும் நிலை இல்லாமல் இருந்தது. இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான தொடர் சற்று ஆஷஸ் தொடர் போன்று இருக்கும். நாங்கள் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து