முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா: ஐரோப்பாவில் பலியான 95 சதவீதம் பேர் 60 வயதை கடந்தவர்கள்: உலக சுகாதார அமைப்பு தகவல்

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

ஐரோப்பாவில், கொரோனா வைரசுக்கு பலியானவர்களில் 95 சதவீதம்பேர், 60 வயதை கடந்தவர்கள் என்று உலக சுகாதார அமைப்பு நிர்வாகி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. உலகளாவிய மொத்த உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு, ஐரோப்பாவில் நிகழ்ந்துள்ளது.இந்நிலையில், ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு அலுவலகத்தின் தலைவர் டாக்டா ஹன்ஸ் க்ளுஜ், கோபன்ஹேகன் நகரில் நேற்று முன்தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரசுக்கு ஐரோப்பாவில் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு புள்ளி விவரத்தில், ஐரோப்பாவில் பலியானோரில் 95 சதவீதத்துக்கு மேற்பட்டோர் 60 வயதை கடந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 80 வயதை தாண்டியவர்கள். அதற்காக கொரோனா தாக்குவதற்கு வயது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. வயதானவர்களை மட்டுமே கொரோனா தாக்கும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அது தவறானது. ஐரோப்பாவில், 50 வயதுக்கு உட்பட்ட கொரோனா நோயாளிகளில் 10 முதல் 15 சதவீதம் பேருக்கு மிதமான அல்லது கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளர் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களும் தீவிர கண்காணிப்பு தேவைப்படும் அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். அதே சமயத்தில், நூறு வயதை தாண்டிய ஒரு சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்திருப்பது நல்ல அம்சம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 950 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதால், சாவு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. பலி எண்ணிக்கையில், இத்தாலிக்கு அடுத்த இடத்தில் ஸ்பெயின் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. அதுபோல், இத்தாலியில், பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டி உள்ளது. உலக அளவில் கொரோனாவுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்தை எட்டியது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து