விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ம் தேதி திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனுமதி ரத்து என்றாலும் வழிபாடுகளை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஷூ பண்டிகையையொட்டி வருகிற 13-ம் தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. பக்தர்கள் அனுமதி கிடையாது என்றாலும், வழிபாடுகளை ஆன்லைன் மூலம் நடத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விஷு பண்டிகையையொட்டி வருகிற 13-ம் தேதி (திங்கட்கிழமை) சபரிமலை கோவில் நடையை தந்திரி மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி திறந்து வைக்கிறார். தொடர்ந்து 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 18-ம்தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் சம்பிராதய முறைப்படி நடைபெறும். ஆனால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. அதே சமயத்தில் கணபதி ஹோமம், நவகிரக நெய்விளக்கு, சகஸ்ர நாம அர்ச்சனை, நெய் விளக்கு, நீராஞ்சனம் ஆகிய அபிஷேக வழிபாடுகளை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முன்பதிவும் தொடங்கி உள்ளது. வழிபாட்டுக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.