சிங்கப்பூரில் தவித்த சென்னை என்ஜினீயருக்கு உதவிய தெலுங்கானா கவர்னர் தமிழிசை

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      தமிழகம்
Tamilisai 2020 05 22

Source: provided

சென்னை : மலேசியாவில் இருந்து புறப்பட்டு ஊரடங்கில் சிக்கி சிங்கப்பூரில் 62 நாட்களாக தவித்த சென்னை என்ஜினீயர், கவர்னர் தமிழிசை உதவியால் நாடு திரும்பியுள்ளார்.

சென்னை கே.கே. நகரை சேர்ந்தவர் யுவராஜ். மெக்கானிக் என்ஜீனியரான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மலேசியாவில் ஒரு எண்ணெய் கிணறு அமைக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்புவதற்காக மலேசியாவில் இருந்து புறப்பட்டு உள்ளார். அவர் வந்த விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியதும் விமான போக்குவரத்து முடங்கியது. இதனால் கடந்த 62 நாட்களாக சிங்கப்பூரில் தவித்துள்ளார்.

பல மாநிலங்களுக்கு இந்தியர்களை அழைத்து வர விமான சேவைகள் உள்ளன. ஆனால் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமான சேவை இல்லை. அண்டை மாநிலமான தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வருவதற்கு விமான சேவை உள்ளது. ஆனால் மற்ற மாநிலத்தவர்கள் அங்கு இறங்குவதற்கு அனுமதி கிடையாது. இதையடுத்து தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசையின் உதவியை அவர் கோரி இருக்கிறார். உடனடியாக கவர்னர் தமிழிசை,  யுவராஜ் ஐதராபாத் வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி யுவராஜ் நேற்று முன்தினம் ஐதராபாத் வந்து சேர்ந்துள்ளார். அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.  ஏற்கனவே சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த போது கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்று பரிசோதித்ததில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தெலுங்கானா அரசின் அனுமதிக்காக அவர் காத்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து