முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் தனிஅலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பு : அவசர சட்டம் பிறப்பித்தார் கவர்னர் பன்வாரிலால் புரோகித்

புதன்கிழமை, 1 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அவசர சட்டத்தை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: 2019-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 6 மற்றும் 11-ம் தேதியிட்ட சுப்ரீம் கோர்ட் ஆணையைத் தொடர்ந்து மறுசீரமைக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகியவற்றிலுள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளின் எல்லை வரையறை பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மேலும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமானது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தும் பொருட்டு, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குச்சாவடிகள் அமைத்தல், குறிப்பேடுகளில் திருத்தம் செய்தல், மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கையாளுவதற்கு அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் இது தொடர்பான மென்பொருள் தயார் செய்தல் போன்ற முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டுள்ளது. 

இதற்கிடையில், திடீரென்று கொரோனா தொற்று நோய் பரவிவருவதால், மத்திய, மாநில அரசுகளால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு எந்திரம் போர்கால அடிப்படையில் கொரானா நோய் தடுப்பு பணிகள், பாதுகாப்பு பணிகள், மீட்பு மற்றும் நலவாழ்வு பணிகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. எனவே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் சுப்ரீம் கோர்ட் ஆணைகளுக்கிணங்க ஊரக உள்ளாட்சி தேர்தல்களை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.  

எனவே, பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றின் தனிஅலுவலர்களின் பதவிக்காலமானது 2020 -ம் ஆண்டு ஜூன் திங்கள் 30-ம் தேதியன்று முடிவடைகிறது.  தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 2020 -ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31-ம் தேதி வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதற்காக, பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் தொடர்புடைய சட்டங்களை திருத்துவதென அரசானது முடிவு செய்துள்ளது.

அதற்கிணங்கிய வகையில் முதல்வரின் பரிந்துரையின் பேரில் கவர்னர் 2020-ம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (மூன்றாம் திருத்த) அவசரச் சட்டத்தினை 30.06.2020 அன்று பிறப்பித்துள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து