ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்? -சென்னை ஐகோர்ட் கேள்வி

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Madras High Cort 2020 08 03

Source: provided

சென்னை : ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டது.

பின்னர், இந்த சொத்துக்கு இழப்பீடு நிர்ணயம் செய்து, அந்த தொகையை சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தியது. மேலும், வேதா நிலையத்தில் உள்ள அசையும், அசையா சொத்துக்களையும் அரசு கையகப்படுத்தியது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் காணொலி காட்சி மூலம் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் சொத்துக்கு இழப்பீடு நிர்ணயம் செய்து, அந்த இழப்பீட்டை சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தி வட்டார வருவாய் அலுவலர் உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை. அதுமட்டுமல்ல தனியாரின் சொத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது.

அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு வேதா நிலையம் ஒன்றும் பொது சொத்து கிடையாது என வாதிடப்பட்டது. மேலும் வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் வரை, இழப்பீடு தொகையை நிர்ணயித்த வட்டார வருவாய் அலுவலர் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை மனுதாரர் ஜெ.தீபா எங்கு இருந்தார்? எங்கு வசித்தார்? என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து