அசாமில் பள்ளி, கல்லூரிகளை செப்டம்பர் 1-ல் திறக்க முடிவு

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      இந்தியா
Assam Assembly 2020 08 02

Source: provided

அசாமில் பள்ளி, கல்லூரிகளை வரும் செப்டம்பர் 1-ம் தேதி திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

இவற்றை மீண்டும் திறப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை. இந்நிலையில், வரும் செப்டம்பர் 1-ம் தேதியன்று அசாமில் உள்ள பள்ளி, கல்லூரிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

இது குறித்து அசாம் கல்வித்துறை அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, கவுகாத்தியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடிவடைந்ததும், செப்டம்பர் 1-ல் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க தற்காலிகமாக முடிவு செய்துள்ளோம். எனினும், மத்திய அரசின் அறிவுறுத்தலின் படியே இதில் இறுதி முடிவை எடுப்போம்.  பள்ளிகளை பொறுத்தவரை, 5 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், வகுப்பறைகளில் இல்லாமல் விளையாட்டு மைதானங்கள், மரத்தடி நிழல் போன்ற திறந்தவெளிகளிலேயே வகுப்புகள் எடுக்கப்படும். 

மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஷிப்ட் முறையில் வகுப்புகள் எடுக்கப்படும். இதில் ஒரு ஷிப்டுக்கு 15 மாணவர்கள் வீதம் பங்கேற்பர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

இதில் வைரஸ் பாதிப்பு இல்லாத ஆசிரியர்களே வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுவர் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து