மூணாறு நிலச்சரிவு சம்பவம்: பினராய் விஜயனுடன் முதல்வர் எடப்பாடி தொலைபேசியில் பேச்சு: மீட்பு நிவாரண பணிகளுக்கு உதவி செய்வதாக உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020      தமிழகம்
CM Photo 2020 08 02

Source: provided

சென்னை : மூணாறு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசினார். 

கேரளாவில்  கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இடுக்கி மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வருகிறது. இந்த மாவட்டம் பெரும்பாலும்   மலைப்பகுதி என்பதால், கடந்த வெள்ளிக் கிழமை இரவு 5-க்கும் மேற்பட்ட இடங்களில்  கடும்  நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், பெரும்பாலான சாலைகளில் மண் மூடி, போக்குவரத்து பாதித்துள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை மூணாறில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள  ராஜமலை  பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், மேடான நிலையில் இருந்த ஒரு தேயிலை தோட்டம் முழுவதுமாக சரிந்து, தொழிலாளர்களின் வீடுகள் மீது விழுந்தது. இதில், 20 வீடுகளும் மண்ணில் புதைந்தன. வீடுகளில் இருந்த அனைவரும் தூக்கத்திலேயே மண்ணில் புதைந்தனர்.

இதையடுத்து, தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மண்ணுக்குள் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 15 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், நிலச்சரிவில் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது.  இதில், வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த சுமார் 80 பேர் வரை இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலச்சரிவில் இறந்தவர்களுள் 10 பேர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து மேலும் 5 பேரின் உடல் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 15 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 36 பேரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி கயத்தாறு பகுதியை சேர்ந்த 40 குடும்பங்கள் தங்கியிருந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி கனமழையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய இணை மந்திரி முரளீதரன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் பேசினார். அப்போது மூணாறு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து கேட்டறிந்த முதல்வர், மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் டுவிட்டர் பக்கத்தில், மூணாறில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து கேரள முதல்வரிடம் கேட்டறிந்தேன். இது தொடர்பாக, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து