இ-பாஸ் நடைமுறை விவகாரம்: தமிழக தலைமை செயலர் விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Shanmugam-2020-07-26

Source: provided

சென்னை : தமிழகத்தில் இ-பாஸ் முறை மனித உரிமை மீறலாகாதா என மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து குறித்து தமிழக தலைமைச் செயலாளர் நான்கு வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க உள்ளவர்கள் முன்னதாக இ-பாஸ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் பலர் அவசர பயணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்காததால் அவதிக்கு உள்ளாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மறுபுறம் இ-பாஸ் பெற்றுத் தர ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யும் இடைத்தரகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து இனி இ-பாஸ் பணி நிமத்தம், வியாபாரம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

எனவே, வழக்கமாக வழங்கப்படும் இ பாஸ்களை விட 36 சதவீதம் அதிகமாக பாஸ்கள் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.  ஆனால் மத்திய அரசு இ-பாஸ் தேவையில்லை என கூறிய நிலையில் தமிழகத்தில் இ-பாஸ் இன்னும் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மத்திய அரசு உத்தரவை மீறி இ-பாஸ் நடைமுறையை தொடர்வது மனித உரிமை மீறிய செயலா? என்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் நான்கு வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து