முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் இன்று வெளியூர் பஸ்கள் ஓடும்

ஞாயிற்றுக்கிழமை, 6 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் முழுவதும் இன்று மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மண்டல பிரிப்பு இல்லாமல் யாரும் எந்த மாவட்டத்திற்கும் செல்லலாம். இப்படி இயல்பு நிலை திரும்புவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று முதல் ரயில்களும் இயக்கப்படவுள்ளதால் மக்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை பதம்பார்த்து வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 90 ஆயிரத்து 633 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த வைரசை ஒழித்துக்கட்ட இந்திய அரசு கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இடையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆலயங்கள் கூட இழுத்து மூடப்பட்டன. பள்ளிக் கல்லூரிகள் இன்று வரை திறக்கப்படவில்லை. அதே போல திரையரங்குகளும் மாதக்கணக்கில் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதை பின்பற்றி தமிழக அரசும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அதன்படி மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கிய இ- பாஸ் நடைமுறை கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது. கடந்த 1-ம் தேதி முதல் மாவட்டத்திற்குள்ளாக நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் பொதுமக்கள் ஓரளவு மகிழ்ச்சியடைந்தனர். வெளியூர் பஸ்களையும் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரி வந்தார்கள். 

இந்தநிலையில்தான் பொது போக்குவரத்துக்கு எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியது.

அதனை ஏற்று பல மாநிலங்கள் பஸ்களை இயக்கி வருகின்றன. தமிழகத்தில் 7-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் ஓடும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்தார்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அவர் இவ்வாறு அறிவித்தார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படுகின்றன. சாதாரண பஸ்கள் மட்டுமின்றி, விரைவு போக்குவரத்து கழக பஸ்களும் இயக்கப்படுகின்றன.

அதனை முன்னிட்டு பராமரிப்பு பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. பஸ்களில் கிருமி நாசினி தெளிப்பது, சுத்தப்படுத்துவது, பிரேக் உள்ளிட்டவைகளை சரிபார்ப்பது போன்ற பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து டிரைவர்களுக்கும், கண்டக்டர்களுக்கும் அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வளவு நாளும் இரவு நேரத்தில் தூங்கி பழகி விட்டதால் இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று டிரைவர்களுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி கண்டக்டர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

வெளியூர் பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அநேகமாக தமிழகத்தில் இயல்பு நிலை வழக்கம் போல் திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

இல்லையேல் மீண்டும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. ஆகவே பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் மீண்டும் லாக்டவுன் போன்ற நிலை வராது என்பது மறுக்க முடியாத உண்மை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து