இந்தியாவில் கொரோனா பலருக்கும் பரவியதற்கு டெல்லி தப்லீக் நிகழ்ச்சிதான் காரணம்: மத்திய அரசு

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2020      இந்தியா
central-government 2020 09 21

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்றதே காரணம் என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மார்ச் முதல் வாரத்தில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் நாடு முழுவதிலிருந்து 9 ஆயிரம் பேர் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர். 

இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் தப்லீக் ஜமாத் தொடர்பாக சிவசேனா எம்.பி. கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய உள்துறை இணைஅமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி,எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அதில், 

கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தப்லீக் ஜமாத்தில் கொரோனா விதிகளை மீறி ஒன்றாக கூடியிருந்த 236 பேரை டெல்லி போலீசார் கைதுசெய்தனர். 2,361 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

தப்லீக் ஜமாத்தின் தலைவர் மவுலானா முகமது சாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது.  டெல்லி அரசு கொரோனா விதிகளை முழுமையாக அமல்படுத்தி,பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

ஆனால், மூடப்பட்ட ஒரு அரங்கிற்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எந்தவிதமான சமூக விலகலையும் கடைப்பிடிக்காமல், சானிடைசர் இல்லாமல், முகக்கவசம் அணியாமல் ஒன்றாகக் கூடியிருந்தார்கள். கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்தில் பலரும் கூடியதும் ஒரு காரணமாகும் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து