முகக்கவசம் அணியாவிட்டால் என்ன? ம.பி. அமைச்சரின் கேள்வியால் சர்ச்சை

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      இந்தியா
Narottam-Misra 2020 09 24

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாவிட்டால் என்ன என்று செய்தியாளர்களிடம் கேட்ட மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சரின் கேள்வியால் சர்ச்சை வெடித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது, கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவது, சமூக இடைவெளிகளைப் பின்பற்றுவது போன்றவைகளைக் கடைபிடிக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவருமான நரோட்டம் மிஸ்ரா,  முகக்கவசம் அணியாவிட்டால் என்ன? என்று செய்தியாளர்களை நோக்கி தெரிவித்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தூரில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நரோட்டம் மிஸ்ரா முகக்கவசம் அணியாமல் காணப்பட்டார். அப்போது முகக்கவசம் அணியாதது குறித்துக் கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த மிஸ்ரா, நான் எப்போதும் முகக்கவசம் அணிந்ததில்லை. அதனால் என்ன? எனத் தெரிவித்தார். 

அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தைரியம் உள்ளவர்கள் யாராவது இருக்கிறார்களா? கொரோனா விதிகள் சாதாரண மக்களுக்கு மட்டும் தானா? ”  என மத்திய பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா விமர்சித்துள்ளார்.  கடுமையான விமர்சனம் எழுந்த நிலையில் அமைச்சர் மிஸ்ரா மருத்துவக் காரணங்களுக்காக முகக்கவசம் அணியவில்லை என்றும் இனி வரும் காலங்களில் முகக்கவசம் அணிவேன் என்றும் விளக்கமளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து