ரூ. 55 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      தமிழகம்
Vijayabaskar 2020 09 26

Source: provided

சென்னை : சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ. 55 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் கடந்த ஜனவரி 2018–ல் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவை மையம் (டி.இ.ஐ.சி) என அழைக்கப்படும் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இம்மையம் தற்போது ரூ. 55 லட்சம் செலவில் பல்வேறு அதிநவீன கருவிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளது.

இங்கு குழந்தைகளின் வளர்ச்சியைச் சோதனை செய்வதற்கான அதிநவீன சிறப்பு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வித பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வசதிகள் இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 

சீரமைக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:–

தமிழகம் முழுவதும் 34 இடங்களில் இதுபோன்ற சிறப்பு வசதிகள் கொண்ட குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளன. ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய மையத்தில் பல்வேறு அதிநவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக ஐம்புலன்களையும் ஒருங்கிணைக்கும் ‘உணர்ச்சி ஒருங்கிணைப்பு அறை இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆட்டிஸம், கவனக்குறைவால் மிகை செயல்பாடு கோளாறு உள்ளிட்டவைகளுக்கும் இங்கு சிகிச்சை அளிக்க முடியும். 

மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.  இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து