5 மணி நேரம் நடந்த செயற்குழு: சட்டமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் அக்டோபர் 7-ல் அறிவிப்பு: ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இணைந்து அறிவிப்பார்கள் என கே.பி.முனுசாமி தகவல்

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020      தமிழகம்
KP-Munuswamy 2020 09 28

Source: provided

சென்னை : வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரும் 7-ம் தேதி இணைந்து அறிவிப்பார்கள் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி சென்னையில் நடந்த செயற்குழு கூட்டத்திற்கு பின் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு தேர்தல்

தமிழக சட்டசபையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படவேண்டும். கொரோனா பரவல் தீவிரமாக உள்ள போதிலும், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், அதை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. 

செயற்குழு கூடியது

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன், வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் முதல்வர் வேட்பாளர் குறித்த விவகாரம் எழுந்தது.

தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளர் பெயரை அறிவிக்குமாறு ஒரு தரப்பினரும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தினர். 

கே.பி. முனுசாமி பேட்டி

இவ்வாறு சுமார் 5 மணி நேரம் வரை தொடர்ந்து நீடித்த செயற்குழு கூட்டம் பிற்பகல் நிறைவு பெற்றது.  கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, வரும் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என்றார்.

முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிவிப்பார்கள் என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார். 

உற்சாக வரவேற்பு

முன்னதாக செயற்குழு கூட்டத்திற்கு வந்த இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செயற்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக முதல்வரும், துணை முதல்வரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதன் பிறகு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அமைச்சர் பெருமக்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு அ.தி.மு.க தலைமை கழகம் களைகட்டி காணப்பட்டது. மயிலாட்டம், செண்டை மேளம், நாதஸ்வரம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கூட்டத்தையொட்டி திரளான தொண்டர்கள் தலைமை கழகத்தில் கூடியிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து