மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா இன்று துவக்கம்

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2020      தமிழகம்
Meenakshi 2020 10 16

Source: provided

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 17-ம்  தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு நவராத்திரி உற்சவ விழா வருகிற 17-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவிழா நாட்களில் மூலஸ்தானத்தில் உள்ள மீனாட்சி அம்மனை தினசரி மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும், பின்னர் இரவு 6.45 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம்.

இடைப்பட்ட நேரமான 5.30 மணி முதல் 6.45 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விசேஷ பூஜைகள் நடைபெறுவதால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அபிஷேகம் நடைபெறும் நேரத்தில் கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் உற்சவர் மீனாட்சி அம்மனை தரிசிக்க பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மூலவர் மீனாட்சி அம்மன் அலங்காரத்தினை முதல் நாளில் தரிசிக்க இயலாத பக்தர்களின் வசதிக்காக மறுநாள் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் அம்மனை தரிசனம் செய்ய சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

நவராத்திரி விழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருவார்.

17-ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 18-ம் தேதி வாதவூர் அடிகளுக்கு உபதேசம், 19-ம்  தேதி சுவாமி தன்னைத்தானே பூஜித்தல், 20-ம்  தேதி விறகு விற்றல், 21-ம் தேதி கடம்பவன வாசினி, 22-ம்  தேதி வேல்வனை செண்டு தொடுத்தல், 23-ம்  தேதி மீனாட்சி பட்டாபிஷேகம், 24-ம்  தேதி மகிஷாசூரமர்த்தினி, 25-ம் தேதி சிவபூஜை அலங்காரத்தில் காட்சி அளிப்பார்.

மேலும் திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகியவை பதிவு செய்திட இயலாது. 31-ம் தேதி சாந்தாபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து