அம்மாவின் அரசாட்சியே தொடர்ந்தது எனும் வரலாற்றை படைப்போம்: துணை முதல்வர் ஓ.பி,எஸ். வாழ்த்து செய்தி

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      தமிழகம்
OPS 2020 10 17

Source: provided

சென்னை : கட்சியின் பொன்விழா ஆண்டிலும், அம்மாவின் அரசாட்சியே தொடர்ந்தது என்னும் வரலாற்றை படைப்போம்! வாகை சூடுவோம் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

அ.தி.மு.க.  49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,  துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோரின் பால் நீங்கா அன்பு கொண்டு, அ.தி.மு.க. என்னும் அற்புத இயக்கத்தை வேர்களாவும், விழுதுகளாகவும்  கட்டிக் காக்கும் அன்புத் தொண்டர்கள், அருமை உடன்பிறப்புக்கள் அனைவருக்கும், கழகத்தின் 49-வது ஆண்டு தொடக்க விழா நல்வாழ்த்துக்களை எல்லையில்லா மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

எம்.ஜி.ஆர் அவர்கள், தமிழ் மக்கள் மீது தான் கொண்டிருந்த  அன்பையும், தமிழக மக்கள் தன் மீது வைத்திருக்கும் பாசத்தையும் அடித்தளமாக கொண்டு, புதியதோர் தமிழகம் படைத்திட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார்.  அம்மா  கழகத் தொண்டர்களை  தாயன்போடு அரவணைத்து, தனது அறிவு, ஆற்றல், உழைப்பு அனைத்தையும் இந்த இயக்கத்திற்கே உரிமையாக்கி உலகப் பேரியக்கங்களில் ஒன்றாக இந்த இயக்கத்தை  வளர்த்தெடுத்தார்.  அம்மா மறைவிற்குப் பின், கழகமே கோயில் என்றும், அம்மாவே தெய்வம் என்றும்,  வணங்கிடும் அம்மாவின் அன்புத்தொண்டர்கள், அம்மாவின் சூளுரைப்படி பல நுhறாண்டுகள் கழகம் நிலை பெற தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் நல்கிட உறுதி பூண்டு, நமது இயக்கம் 48 ஆண்டுகள் கடந்து 49-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

கட்சியின் மீது நம்பிக்கையுடன் இருந்தால், கட்சித் தலைமையின் மீது விசுவாசத்துடன்  இருந்தால், கடைக்கோடி தொண்டரும் கழகத்தை வழிநடத்தும் ஓருங்கிணைப்பாளராக முடியும், அ.தி.மு.க. அரசுக்கு தலைமையேற்கும் முதலமைச்சராக முடியும், என்று உலகுக்கு எடுத்துகாட்டிக் கொண்டிருக்கும் இயக்கம், நம்முடைய இயக்கம். உண்மையும் உழைப்பும் இருந்தால், பதவிகளும், உதவிகளும் தானாகத் தொண்டர்களைத் தேடிவரும் என்று வெள்ளிடைமலை போல் வெளிப்படையாக காட்டிக் கொண்டிருக்கும் இயக்கம்,  நம்முடைய இயக்கம்.   இந்த இயக்கத்தை ஆட்சி பீடம் ஏற்றிய எம்.ஜி.ஆர், அவரது பாதையில் பொற்கால ஆட்சி தந்து புகழ் படைத்த  அம்மா ஆகிய இரு பெரும் தலைவர்களின் பாதையில், அந்த மாபெரும் தலைவர்கள் நமக்கு கற்று தந்த பாடங்கள் மற்றும் படிப்பினைகளின் வழி நின்று, ஒருமித்த கருத்து கொண்ட ஒற்றுமை உணர்வோடு, ஒய்வில்லா உழைப்பாலும் மக்கள் நலம் பேணும் மாண்பாலும், கழகத்தையும் அம்மாவின் அரசையும் வெற்றி நடைபோட செய்து, தமிழக மக்களின் அன்பையும் ஆதரவையும் ஒரு சேரப் பெற்று, அவர்களது இதயங்களில் நீங்காத் தனியிடத்தை பெற்றிக்கிறோம்.   இன்று நமது எண்ணங்களில் நிறைந்திருக்கும் சொல் ஒன்றுதான். அதுதான் வெற்றி! நாம் மேற்கொள்ள வேண்டிய செயலும் ஒன்றுதான். அதுதான் வெற்றிக்குப் பாடுபடும் உழைப்பு!

அம்மா சூளுரைத்த படி, மகத்தான இந்த இயக்கத்தை இன்னும் நூறு ஆண்டுகள் நிலை பெறச் செய்திட வேண்டும். அம்மாவின் அறிவுரைப்படி மக்கள் பணி செய்ய எதிர்வரும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வை மீண்டும் வெற்றி பெறச் செய்திட வேண்டும்.  அம்மாவின்  திட்டங்கள் எல்லாம் வெற்றிகரமாக தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று சொன்னால், சுயநல சந்தர்ப்பவாத கும்பலிடம் தமிழகம்  எப்போதும் சிக்கி விடக்கூடாது என்று சொன்னால், அம்மாவின் வழியில் மக்கள் நலனுக்கான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று சொன்னால்,  2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று அம்மாவின் அரசு அமைந்திட வேண்டும்.   கட்சியின் பொன்விழா ஆண்டிலும், அம்மாவின் அரசாட்சியே தொடர்ந்தது என்னும் வரலாற்றை படைப்போம்! வாகை சூடுவோம்! இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து