குறைந்து வரும் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த கலெக்டர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி 28-ம் தேதி ஆலோசனை: தியேட்டர்கள் திறப்பு குறித்து முக்கிய முடிவு

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      தமிழகம்
Edappadi 2020 10 24-2

Source: provided

சென்னை : கொரோனா பொது முடக்கத்தில் அடுத்தகட்டத் தளர்வுகள், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் வரும் 28-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில் தியேட்டர்கள் திறப்பு மற்றும் புறநகர் மின்சார ரயில் சேவை போன்றவை குறித்து முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வரை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும் மக்களின் நலனுக்காக  பல்வேறு தளர்வுகள் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

அதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது, தனி மனித இடைவெளியை பின்பற்றுவது  போன்றவற்றை பின்பற்றினால் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

கொரோனா தடுப்பு சட்டத்தின் கீழ் பொது இடங்களில் முக கவசம் தனி மனித இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  பின்பற்றாத தனி நபருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். 

இதுவரை கிட்டத்தட்ட 15 மாவட்டங்களுக்கும் மேலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அம்மாவட்டங்களில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

அதை தொடர்ந்து பல்வேறு தொழில்முனைவோர்களுடனும், விவசாய பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருடனும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், வரும் 28-ம் தேதி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். 

இந்த ஆலோசனையின் போது பண்டிகை காலம் என்பதால், நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் எனத்தெரிகிறது.

கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் பொது முடக்கத்தில் அடுத்த கட்ட தளர்வுகளை அளிப்பது குறித்த முடிவு செய்யப்பட உள்ளது.  குறிப்பாக, திரையரங்குகள் திறப்பு, புறநகர் மின்சார ரயில்கள் சேவை தொடங்குவது போன்றவற்றின் மீதான முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி மின்சார ரெயில் சேவைகளைத் தொடங்குவதற்கு தெற்கு ரெயில்வேக்கு உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும் என ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் நேற்றுமுன்தினம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து