சி.எஸ்.கே. அணியுடன் இன்று மோதல்: ஜெர்ஸியை மாற்றிய ஆர்.சி.பி அணி

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      விளையாட்டு
Virat-Kohli 2020 10 24

Source: provided

துபாய் : துபாயில் இன்று நடக்கும் சி.எஸ்.கே அணிக்கு எதிரான ஐ.பி.எல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் வழக்கமான ஆடையுடன் களமிறங்காமல் புதுவிதமான வண்ணத்தில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.

ஐபிஎல் டி20 தொடரின் 44-வது லீக் ஆட்டம் ஆர்.சி.பி மற்றும் சி.எஸ்.கே அணிகளுக்கு இடையே துபாயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கிறது. 

புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி அணி 10 போட்டிகளில் 3 தோல்வி, 7 வெற்றி என 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் 3 வெற்றி, 8 தோல்வியுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால், ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும். அதேசமயம், சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டது.

அடுத்து சிஎஸ்கே அணி மோதும் 3 ஆட்டங்களில் வென்றாலும் ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல முடியாது. இந்தச் சூழலில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி வழக்கமான தங்களின் சிவப்பு, கருப்பு நிற ஆடைக்குப் பதிலாக இன்றுபச்சை நிற ஆடையுடன் விளையாட உள்ளனர். 

சுற்றுச்சூழலைக் காப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாளை பச்சை நிற ஜெர்ஸியுடன் ஆர்சிபி அணி விளையாட உள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு சீசனிலிருந்து இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை ஆர்சிபி அணி செய்து வருகிறது. 

ஐபிஎல் தொடரில் ஏதாவது ஓர் ஆட்டத்தில் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து விளையாடி சுற்றுச்சூழலைக் காப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்குமுன் நடந்த சீசன்களில் தங்களின் ரசிகர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளைக் கொடுத்து நடவைத்து சுற்றுச்சூழலைக் காக்க உதவினர். 

மேலும், போட்டியைக் காண வரும் ரசிகர்கள் தனித்தனியாக வாகனத்தில் வராமல் பேருந்துகளில் வந்து எரிபொருளை மிச்சப்படுத்துங்கள் என்று விழிப்புணர்வூட்டியது ஆர்சிபி அணி.  கடந்த 2016-ம் ஆண்டு சீசனில் பெங்களூரு சின்னச்சாமி அரங்கிற்குப் போட்டியைக் காண வரும் ரசிகர்கள் பேட்டரி வாகனத்தில் அழைத்துவரப்பட்டனர்.

ரசிகர்கள் சைக்கிளில் வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் காக்க வலியுறுத்தப்பட்டது.  துபாயில் நாளை நடக்கும் போட்டியில், ''இந்த பூமி கிரகத்தைக் காப்போம், ஆரோக்கியமாக வைத்திருப்போம்'' என்ற விழிப்புணர்வு வாசகத்தை ஆர்சிபி அணி முன்னெடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து