முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இட ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத  உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளதை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். 

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று முன்தினம் பிறப்பித்தது. 

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டில், அனைத்துப் பிரிவிலும் இந்த 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு இந்த 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் பின்பற்றப்படும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத  உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 7.5 சதவீத  இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய கவர்னருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

காலதாமதம் செய்தாலும், தமிழக அரசின் சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியதை வரவேற்கிறோம் என்று தி.க. தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளா். 

தமிழக அரசின் மசோதாவுக்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. இதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த ஆண்டே மருத்துவப் படிப்பில் சேருவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதை மகிழ்ச்சியான தருணமாகப் பார்க்கிறோம். மேலும், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை பிறப்பித்த அரசாங்கத்துக்கும், மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநருக்கும் வாழ்த்துகளையும், வரவேற்புகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்கள் குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் நீட் தேர்வின் வெற்றியின் அடிப்படையில் அவர்கள் மருத்துவர் கனவை நனவாக்கக்கூடிய மிக முக்கியமான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பதற்கு த.மா.கா. நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து