அரசு மருத்துவமனை அமைய 1,838 மரங்களை வெட்ட சென்னை ஐகோர்ட்டு அனுமதி

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2020      தமிழகம்
Madras-High-Cort 2020

Source: provided

சென்னை : நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக அந்த பகுதியில் வளர்ந்திருக்கும் மரங்களை வெட்ட அரசு முடிவு செய்தது. ஆனால் இதனை அனுமதிக்க கூடாது என கோரி வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இதனை விசாரித்த ஐகோர்ட்டு மரங்களை வெட்டக்கூடாது என அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மருத்துவ கல்லூரி அமைய உள்ள வனப்பகுதியில் உள்ள 25 ஏக்கர் இடத்தில் உள்ள மரங்கள் மட்டுமே வெட்டப்பட உள்ளது. 

அந்த 25 ஏக்கரில் மண் சார்ந்த மரங்கள் ஏதும் இல்லை. வெளிநாட்டு மரங்களே உள்ளன. அங்கிருக்கும் ஆயிரத்து 838 மரங்களில் 90 சதவீதம் தைல மரங்களே உள்ளன என கூறினார். வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மரங்களை அரசு நடவுள்ளது என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து அரசின் இந்த விளக்கத்தை பதிவு செய்து கொண்டு, மரங்களை வெட்டுவதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இதன் பின்னர் நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே மரங்களை ஏலம் விட வேண்டும். மரங்களை வெட்டியது தொடர்பான புகைப்பட விவரங்களோடு அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் மாதம் 14-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து