திட்ட பணிகளை நிறைவேற்றியதில் தமிழகத்தில் சேலம் மாநகராட்சி முதலிடம் : முதல்வர் எடப்பாடி பாராட்டு

வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2020      தமிழகம்
Edappadi 2020 11

Source: provided

சென்னை : சீர்மிகு நகர திட்டப்பணிகளை அமல்படுத்துவது குறித்த தரவரிசை பட்டியலில், சேலம் மாநகராட்சி 70.7 புள்ளிகளில் தேசிய அளவில் 8-ம் இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சீர்மிகு நகர திட்டப்பணிகளை செயல்படுத்துவது குறித்த தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் சேலம் மாநகராட்சி 8-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. தமிழக சீர்மிகுநகரத் திட்டப்ணிகள் துறை சார்ந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் நகர்புற வளர்ச்சித்துறை சார்பில் 2016 மார்ச் மாதம் சேலம், கோவை, சென்னை உள்பட 100 நகரங்கள், சீர்மிகு நகர திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழகத்தில் 11 மாநகராட்சிகள் இத்திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் நிறைவேற்றுவதை அடிப்படையாக வைத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதில் சீர்மிகு நகர திட்டத்தில் ஒதுக்கீடு செய்த நிதியை பயன்படுத்தியது, திட்டப்பணிகளை நிறைவேற்றியது உள்ளிட்டவை அடிப்படையில், மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. தற்போது தரவரிசை பட்டியலில் சேலம் மாநகராட்சி 70.7 புள்ளிகளுடன் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்திய அளவில், 8-ம் இடத்தையும் பிடித்தது. அகில இந்திய அளவில் முதலிடத்தை அகமதாபாத், 2-ம் இடத்தை சூரத், 3 ம் இடத்தை இந்தூர் நகரங்கள் பிடித்துள்ளன. 

சேலம் மாநகராட்சியில் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று, 965.87 கோடி ரூபாய் மதிப்பில் 81 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, சீர்மிகு நகர பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. கொரோனா சூழலால், நான்கு மாதம் வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த 3 மாதங்களாக முழு வேகத்தில் நடந்து வருகின்றன.

ரூ.18.8 கோடியில் திருமணி முத்தாறு கரைகள் அபிவிருத்தி பணி, ரூ.7.85 கோடியில் விக்டோரியா பல்லடுக்கு வாகன நிறுத்தம், ரூ. 5.90 கோடியில் புது பஸ் ஸ்டாண்ட் புனரமைப்பு பணி, ரூ.37.16 கோடியில் 11 இடங்களில் ‘ஸ்மார்ட்’ சாலை, ரூ.25.70 கோடியில் 30 நுண்ணுயிர் உரத்தயாரிப்பு மையங்கள், ரூ. 3.20 கோடியில், 2 இடங்களில் திடக்கழிவு எரியூட்டு ஆலைகள் உள்ளிட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

இதனால் கடந்த ஆண்டுகளில், தரவரிசைப்பட்டியலில் 50 நகரங்களுக்கும் பின்னடைவில் இருந்த சேலம் மாநகராட்சி, தற்போது 8-ம் இடத்தை பிடித்துள்ளது. இப்பட்டியலில், ஈரோடு 18-ம் இடத்தையும், திருப்பூர் 24-ம் இடத்தையும், திருச்சி 60-வது இடத்தையும் பிடித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து