நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது : புதுச்சேரியிலும் ஆய்வு நடத்த திட்டம்

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020      தமிழகம்
Nivar-storm 2020 11 25

Source: provided

சென்னை : நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை 30-ம் தேதி மத்திய குழு தமிழகம் வருகிறது. 

தென் மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் மரக்காணம் அருகே கடந்த 25-ம் தேதி இரவு 11.30 மணியில் தொடங்கி 26-ம் தேதி அதிகாலை 2.30 மணி வரை கரையைக் கடந்தது. இதனால், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் குடிசை வீடுகள், விவசாய நிலங்கள் போன்றவை பாதிக்கப்பட்டன.

இந்த சூழலில் நிவர் புயலால் தமிழகத்தில் பெருமளவு பாதிப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் புதுச்சேரி அருகே இப்புயல் கரையை கடந்ததால் அங்கு பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய 30-ம் தேதி மத்திய குழு தமிழகம் வருகிறது. டிசம்பர் 1-ம் தேதி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிக்க உள்ளது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்திற்கு வெள்ள நிவாரண தொகையை மத்திய அரசு விடுவிக்கும். தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆய்வு நடத்த மத்திய குழு திட்டமிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து