வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு இல்லை: மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

புதன்கிழமை, 13 ஜனவரி 2021      இந்தியா
Income-tax 2021 01 13

Source: provided

புதுடெல்லி : வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை, பிப்ரவரி 15-ம் தேதிக்கும் மேல் நீட்டிக்க மத்திய நிதியமைச்சகம் மறுத்து விட்டது. 

தணிக்கை தேவைப்படக்கூடிய, தனிநபர்களுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கடைசி தேதி, பிப்ரவரி 15 ஆகும். இந்நிலையில், இதை நீட்டிக்க கோரி கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், மத்திய நிதியமைச்சகம் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து, கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், தனிநபர்களுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 10-ம் தேதி என்றும், நிறுவனங்களுக்கு, பிப்ரவரி 15-ம் தேதி என்றும் நீட்டித்து அறிவித்தது. மேலும், தணிக்கை தேவைப்படும் தாக்கல்களுக்கு, கடைசி தேதி பிப்ரவரி 15-ம் தேதி என்றும் அறிவித்தது. இதற்கு முன், கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாளாக இருந்தது.  

இந்நிலையில், பிப்ரவரி 15-ம் தேதி என்பதை மேலும் நீட்டிக்குமாறு பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், மத்திய நிதியமைச்சகம் மேலும் கூடுதல் கால அவகாசம் வழங்க முடியாது என்று அவர்களது கோரிக்கையை நிராகரித்து அறிவித்துள்ளது. கடந்த, 2019 - 20 நிதியாண்டுக்கான, வருமான வரி தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 10-ம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் 5.95 கோடி பேர் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட கணக்குகள் எண்ணிக்கை, 5.67 கோடி என வருமான வரி துறை தெரிவித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து