உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இன்று துவக்கி வைக்கின்றனர்

வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021      தமிழகம்
EPS OPS 2020 11 08

Source: provided

சென்னை : உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி அலங்காநல்லூரில் இன்று (16-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். 

மதுரை மாவட்டத்தில் பொங்கல் திருநாளையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டிகள் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது.

50 சதவீத பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அரசு அனுமதி வழங்கியது. நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்காக முகூர்த்தக்கால் நடும் விழாவில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்று சிறப்பாக மாடு பிடிக்கும் வீரருக்கு இலவசமாக கார் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அலங்காநல்லூர் கோட்டை முனியசாமி திடலில் நடைபெறும் போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்கள்.

இந்த போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பார்வையாளர்களின் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு அவர்களுக்கான குடிநீர், கழிப்பறை மற்றும் பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைதானங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஆங்காங்கே சி.சி.டி.வி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.  ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் இதுவரை 655 காளைகள் மருத்துவ ரீதியாக தகுதி பெற்றுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து