நிவர் மற்றும் புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும்: டெல்லியில் பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கோரிக்கை: பல்வேறு திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க கோரினார்

செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021      இந்தியா
Edappadi 2020 11 19

Source: provided

புதுடெல்லி : நிவர் மற்றும் புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று  டெல்லியில் பிரதமரை சந்தித்து முதல்வர் எடப்பாடி கோரிக்கை விடுத்தார். மேலும்  தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க கோரி அவர் மனு அளித்தார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றார்.  டெல்லியில் உள்ள தமிழக அரசு இல்லத்தில் தங்கிய அவர், முதல் நிகழ்ச்சியாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு, 8.40 வரை நீடித்தது. அப்போது நிவர், புரவி புயல்கள் பாதிப்புக்கான நிவாரணம், நிரந்தர கட்டமைப்பு மேம்பாட்டு நிவாரணம் போன்றவற்றை வழங்கும்படி அமித்ஷாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். 

பிரதமருடன் சந்திப்பு

அதை தொடர்ந்து நேற்று காலை 10.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு நிதி உதவிகளை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம், நடந்தாய் வாழி காவிரி திட்டம், காவிரி படுகை சுத்தப்படுத்துதல் திட்டம் ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.  இத்துடன் நிவர், புரவி புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரிடம் மனு கொடுத்தார். நிலுவை தொகை

தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு துறைகளின் கீழ் தர வேண்டிய ரூ.19 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாட்டுக்காக ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு நிதி தர வேண்டி உள்ளது. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார். 

சென்னையில் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரெயில் திட்டப்பணி நிறைவடைந்துள்ளது. இதே போல தூத்துக்குடி எரிவாயு திட்டமும் நிறைவடைந்திருக்கிறது. 2 திட்டங்களையும் தொடங்கி வைக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.  மேலும் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம், கீழ்பவானி நவீனப்படுத்தும் திட் டம், கல்லணை புனரமைப்பு திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும்படியும் கேட்டுக் கொண்டார். 

கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரிடம் வலியுறுத்தினார்.  இந்த சந்திப்பு முடிந்ததும் டெல்லியில் கட்டப்பட்டு வரும் அ.தி.மு.க. அலுவலக கட்டுமானப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். பின்னர் தமிழக அரசு இல்லத்திற்கு திரும்பி சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை 5.10 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு அவர் சென்னை திரும்பினார். 

முன்னதாக பிரதமர் மோடியை சந்தித்த பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினேன். தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு முடித்து வைக்கப்பட்ட பணிகளைத் தொடங்கி வைக்கவும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் வரவேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் வருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.  காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம், கல்லணை புனரமைப்புத் திட்டம், பவானி உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் திட்டம், முடிந்துள்ள வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை திட்டம் ஆகியவற்றைத் தொடங்கி வைக்க வேண்டும் என்றும், இந்தியன் ஆயில் தூத்துக்குடி எரிவாயு திட்டத்தைத் தொடங்கி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். பிரதமர் அதற்கு இசைவு தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களுக்குப் பெரிதும் பயன்படும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம், காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் நடந்தாய் வாழி காவேரி திட்டம், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது நிலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை வைத்தேன்.  நிவர், புரெவி புயல் பாதிப்புகள் மற்றும் ஜனவரியில் அதிக மழை காரணமாக விவசாயிகள் பாதிப்புக்கான நிவாரணத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். 

தமிழ்நாட்டின் பல்வேறு முக்கியத் திட்டங்களுக்குப் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் நிதி ஆதாரம் பெறுவதற்கு அனுமதி கேட்டுள்ளேன். திருவள்ளூர் மாவட்டத்தில் மருந்துகள் பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவக் கருவிகள் பூங்கா அமைக்கவும் கோரிக்கை வைத்துள்ளேன்.  இலங்கைச் சிறையிலிருந்து 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கோரிக்கையை ஏற்று மீதமுள்ளவர்கள் மீட்கப்பட உள்ளனர்.  இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து