7-ஆம் கட்ட கீழடி அகழ்வாய்வு: பிப்ரவரி முதல் வாரம் தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      தமிழகம்
Excavation 2021 01 22

கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.

மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களிலும் தமிழகத் தொல்லியல் துறையின் சார்பாக இதுவரை 6 கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்துள்ளது.

கீழடியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19- ஆம் தேதி 6 ஆம் கட்ட அகழாய்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். ஒரு மாதம் நடைபெற்ற அகழாய்வில் இரு வண்ண பானைகள், பானை ஓடுகள், பாசிகள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடுகள் போன்றவை கண்டறியப்பட்டது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து ஊரடங்கு உத்தரவால் கீழடி 6 ஆம் கட்ட அகழ்வாய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் 55 நாட்களுக்கு பிறகு மீண்டும் 6 ஆம் கட்ட அகழ்வாய்வு பணி தொடங்கி நடந்தது. அதில் தங்கக்காசுகள், உறை கிணறுகள், வளையல்கள், அணிகலன்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டது. செப்டம்பர் 30-ந் தேதியுடன் 6 ஆம் கட்ட அகழ்வாய்வு பணி நிறைவு பெற்றது.

கீழடி ஆகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருள்கள் வைப்பகம் அமைப்பதற்கான பணிகளை செப்டம்பர் மாதம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட உதயச்சந்திரன் 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்வதற்கான மத்திய அரசின் அனுமதி கோருவது தொடர்பாகவும் தொல்லியல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார்.

இந்நிலையில் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். அகழ்வாராய்ச்சி தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில் 7-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெறும் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து