கோவை : என்னை யாரும் விலைகொடுத்து வாங்க முடியாது. அடிமையாக்கவும் முடியாது. பதவி என்பது தோளிலே போட்டுக்கொள்ளும் துண்டு போன்றது என்று நினைப்பவன் நான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கோவை போத்தனூரில் ஜமாத் தலைவர்களுடன் முதல்வர் பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது,
மதச் சண்டை, சாதிச் சண்டை வர இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. எந்தச் சூழலிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். மத்திய அரசு சில சட்டங்களைக் கொண்டு வரும் போது அச்சப்படுகிறார்கள். நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை. என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. அடிமையாக்கவும் முடியாது. பதவி என்பது தோளிலே போட்டுக் கொள்ளும் துண்டு போன்றது என்று நினைப்பவன் நான். நான் உறுதியாகச் சொல்கிறேன். யாரும், யாரையும் மிரட்ட முடியாது. இந்த மண்ணிலே பிறந்த ஒவ்வொருவரும் வாழ உரிமை உண்டு என்று பேசினார்.
தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக நேற்று காலை 7.50 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர், செல்வபுரத்தில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு குனியமுத்தூர் செல்வதற்கு முன்பாக பேரூர் சென்ற முதல்வர், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றார்.