புதுடெல்லி : மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
பாராளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என்று 3 தொடர்கள் நடைபெறும். கடந்த ஆண்டு நாட்டில் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 1-ந்தேதிக்கு பதிலாக செப்டம்பர் 23-ம் தேதி முன்கூட்டியே முடிக்கப்பட்டது.
அடுத்து நவம்பர் கடைசி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெறுகிற குளிர்கால கூட்டத்தொடர், கொரோனாவுக்கு எதிராக நாடு தொடர்ந்து போராடிக் கொண்டிருந்ததால் நடைபெறவே இல்லை.
இந்த நிலையில் பாராளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக 29-ம் தேதி கூடுகிறது. அன்று இருசபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றுகிறார். பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் ஆகிறது.
பிப்ரவரி 1-ம் தேதி மக்களவையில் 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். முன்னதாக அல்வா தயாரிக்கும் பணியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டார். இணை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.