அகமதாபாத்தில் 3-வது டெஸ்ட் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம்- 55 ஆயிரம் ரசிகர்கள் அனுமதி

வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2021      விளையாட்டு
Stadium-in-Ahmedabad-2021-0

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் 2 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.

முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இந்தியா 317 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோதிரா சர்தார் படேல் மைதானத்தில் நடத்தப்படுகிறது.

3-வது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பகல்-இரவாக நடக்கிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது. மோதிரா சர்தார் படேல் மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும். இங்கு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளது.முதலில் இங்கு 49 ஆயிரம் பேர் அமர முடியும். மறு சீரமைப்புக்கு பிறகு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் ஆனது. மெல்போர்ன் ஸ்டேடியத்தில் 90 ஆயிரம் பேர் அமரும் வசதி உள்ளது. அதை அகமதாபாத் ஸ்டேடியம் முறியடித்தது.

சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் அதி நவீன வசதிகள் உள்ளன. மைதானத்தில் வீரர்களுக்காக 4 டிரெஸ்சிங் ரூம்கள் உள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே போட்டியை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி 3-வது டெஸ்ட் போட்டிக்கு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அங்கு 55 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. சீரமைப்புக்கு பிறகு முதல் சர்வதேச போட்டி நடைபெறுவதால், அங்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் 2-வது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் வரை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியை நேரில் ரசித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து