சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை: சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து

வியாழக்கிழமை, 8 ஏப்ரல் 2021      தமிழகம்
madras-high-court--2021-04-

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை என சென்னை ஐகோர்ட்  நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் -திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் ஒப்பந்த காலம் 2019 -ம் ஆண்டு முடிந்து விட்டதால், அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரி திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்  தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலிக்கப்பட முடியாது என்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தினர்.   மேலும் பாஸ்டேக் முறையை பொறுத்தவரை அது எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என்றும் பாஸ்டேக் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

சுங்கக்கட்டண வசூலில் தேசிய அளவிலான கொள்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் சுங்கச்சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் இல்லாத அளவிற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி, இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து