முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக்கில் 2 பதக்கம்: நாட்டுக்காக பதக்கம் வென்றது பெருமை: பி.வி.சிந்து நெகிழ்ச்சி

திங்கட்கிழமை, 2 ஆகஸ்ட் 2021      விளையாட்டு
Image Unavailable

ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாற்றை அவர் படைத்தார். வெண்கலம் வென்றதன் மூலம் பெருமைபடுவதாக நெகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்துள்ளார்.

2-வது பதக்கம்... 

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. 26 வயதான இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இதன் மூலம் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் கிடைத்தது. 

முதலில் வெள்ளி...

பளு தூக்கம் வீராங்கனை மிராபாய் சானு முதலில் வெள்ளி பதக்கம் வென்றார். அதைத் தொடர்ந்து குத்துச் சண்டை வீராங்கனை லவ்லினா வெண்கல பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அரை இறுதிக்கு நுழைந்ததன் மூலம் பதக்கம் உறுதியானது.

தனிநபர் பிரிவில்... 

தற்போது பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாற்றை அவர் படைத் தார்.

சுஷில்குமார்... 

வீரர்களை பொறுத்தவரை சுஷில்குமார் (மல்யுத் தம்) மட்டும் 2 பதக்கம் கைப்பற்றி உள்ளார். இவர் 2008 ஒலிம்பிக்கில் வெண்கலமும், 2012 ஒலிம்பிக்கில் வெள்ளியும் பெற்றார்.

சிறிய வருத்தம்...

புதிய சாதனை நிகழ்த்திய உலக சாம்பியனான பி.வி. சிந்து கூறியதாவது., கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் பெற்று தற்போது அதைவிட சிறந்த நிலையை பெற முடியாமல் போனது சிறிய வருத்தத்தை அளிக்கிறது. ஆனாலும் ஏமாற்றம் இல்லை. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

மிகவும் மகிழ்ச்சி... 

இந்த பதக்கம் மூலம் பேட்மிண்டனில் புதிய தலைமுறை வீரர்-வீராங்கனைகளை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். நிறையபேர் கடினமாக உழைப்பார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் நன்றாக செயல்பட்டு இருக்கிறேன் என்று நினைக்கிறேன். நாட்டுக்காக ஒரு பதக்கம் பெறுவது நிச்சயமாக பெருமை அளிப்பதாகும்.

சவாலாக இருக்கும்...

2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நிச்சயமாக ஒரு சவாலாக இருக்கும். எனது ஆட்டத்திறன் தொடர்ந்து மேம்பட்டுள்ளது. ஒவ்வொருமுறை நான் வெற்றி பெறும்போது முன்னேற்றம் அடைந்ததாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த ஒலிம்பிக்கிலும்....

சிந்துவின் தந்தை ரமணா கூறுகையில், ‘சிந்துவின் பயிற்சியாளர் பார்க் டா சாங்குக்கு (தென்கொரியா) நன்றி சொல்ல விரும்புகிறேன். இதே போல் சிந்துவுக்கு ஆதரவாக இருந்த மத்திய அரசு, பேட்மிண்டன் சம்மேளனம், ஊடகத்தினருக்கும் நன்றி. தேசத்துக்காக சிந்து பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சிந்து இன்று டெல்லி திரும்புகிறார். அவரை வரவேற்க நான் டெல்லி செல்ல உள்ளேன். அடுத்த ஒலிம்பிக்கிலும் சிந்து விளையாடுவார் என்று நம்புகிறேன். அவர் தொடர்ந்து உற்சாகமாக விளையாடி வருகிறார்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து