தமிழகத்துக்கு ரூ.183.67 கோடிவருவாய் பற்றாக்குறை நிதி: விடுவித்தது மத்திய அரசு

Central-government 2021 07

தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு  6-வது தவணையாக ரூ. 9,871 கோடி வருவாய்ப் பற்றாக்குறை நிதியை நேற்று மத்திய அரசு விடுவித்துள்ளது.

மத்திய - மாநில அரசுகளுக்கிடையே வருவாயைப் பகிா்ந்து கொள்வது தொடா்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிதிக் குழு வழங்கும். வருவாயை விட செலவினம் அதிகமாகக் காணப்படும் மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை நிதியை வழங்குவதற்கு நிதிக் குழு பரிந்துரைக்கும். அவ்வாறு வழங்கப்படும் நிதி மாநிலங்களின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க உதவும். 

அதன்படி, 15-வது நிதிக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தகுதிவாய்ந்த 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை நிதியை மாதந்தோறும் ஒவ்வொரு தவணைகளாக விடுவித்து வருகிறது. இதில் ஆறாவது தவணையாக தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு ரூ. 9,871 கோடியை வருவாய்ப் பற்றாக்குறை நிதியாக மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 6-வது தவணையாக ரூ. 183.67 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது. 

15-வது நிதிக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ரூ. 1,18,452 கோடியில் தமிழகம், ஆந்திரம், அசாம், அரியானா, இமாசலப் பிரதேசம், கா்நாடகம், கேரளம், மணிப்பூா், மேகாலயம், மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய 17 மாநிலங்களுக்கு இதுவரை 6 தவணைகளையும் சேர்த்து ரூ. 59,226 கோடி நிதி விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 தவணைகளில் மொத்தத் தொகையும் விடுவிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து