இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிந்தது நாடு முழுவதும் 16.14 லட்சம் பேர் எழுதினர்

Neet 2021 07 18

Source: provided

சென்னை: நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு நேற்று நடந்தது. இதில் 16.14 லட்சம் பேர் தேர்வு எழுதினர். 

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேருவதற்கான, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு நேற்று நடந்தது. நாடு முழுவதும் 202 நகரங்களில் 3,862 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்பட்டது.  அதில், 16.14 லட்சம் பேர் தேர்வு எழுதினர். கடந்த ஆண்டு, 15.97 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், இந்த ஆண்டு, 17 ஆயிரம் பேர் கூடுதலாக எழுதினர். 

தமிழகத்தில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 70 ஆயிரம் மாணவியர் மற்றும், 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். கடந்த ஆண்டில், 1.17 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.  

சென்னை, கோவை, கடலுார், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் நகரங்களில் மொத்தம், 224 பள்ளி, கல்லுாரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 

கட்டுப்பாடு

இந்த தேர்வு மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடந்தது.  தேர்வுக்கு வந்தவர்கள் 1:15 மணிக்குள், அவரவர் இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். மதியம் 1:30 மணிக்கு தேர்வர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டன. 1:30 மணிக்கு மேல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.  

மாணவியரை, பெண் கண்காணிப்பாளர்கள் சோதனை செய்தனர். ஹால் டிக்கெட், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி சான்றிதழ், வெள்ளை நிற பின்னணியில் போஸ்ட் கார்ட் அளவு கலர் புகைப்படம் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தடை செய்யப்பட்டவை

புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள், கால்குலேட்டர், ப்ளூடூத், இயர்போன், மொபைல் போன் போன்ற மின்னணு பொருட்கள், வாட்ச், பர்ஸ், பிரேஸ்லேட், மைக்ரோசிப், கேமரா என எந்த பொருளையும் எடுத்துச் செல்லக் கூடாது. தேர்வு மையத்திலேயே பேனா வழங்கப்படும். இந்த முறை, கிருமி நாசினி மற்றும் முகக்கவசத்தை தேர்வு மையத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

13 மொழிகளில் தேர்வு

ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில், வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதே, எந்த மொழி என்று தேர்வு செய்கின்றனரோ, அந்த மொழியில் வினாத்தாள் இருந்தது. அதே மொழியிலோ, ஆங்கிலத்திலோ விடை எழுதலாம்.

மல்டிபிள் சாய்ஸ்

இந்த முறை வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் இருந்து தலா, 50 கேள்விகள் இடம் பெற்றன.  ஒவ்வொரு பாடத்திலும் இரண்டாவது பிரிவில் 15 வினாக்களில் 10 கேள்விகளுக்கு மட்டும் விடை அளித்தால் போதும்.முதல் பிரிவில் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடைக்கு, தலா, நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு, ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து