முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

' இந்தியா - இலங்கை ' இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து: இலங்கை அமைச்சர் தகவல்

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக இலங்கை அமைச்சர் சிவகங்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டைமான் மற்றும் இலங்கை கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை பிரதம மந்திரியின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டைமான், இலங்கையில் உள்ள இந்திய படகுகளை விடுவிக்க வேண்டும், எதிர்காலத்தில் கடலில் நட்பு பயணம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கையில் அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி இரு நாட்டு மீனவர்களின் உறவுகளை மேம்படுத்தி அமைதியான முறையில் மீன்பிடி தொழில் நடத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இலங்கையில் துறைமுகப் பணிகளை சீனா ஏற்று நடத்துவதில் எந்த பாதிப்பும் இல்லை. சீனா துறைமுகம் கட்டவில்லை துறைமுக விரிவாக்கப் பணிகளை சீனர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவு எந்தவிதத்திலும் பாதிக்காது என்றார் செந்தில் தொண்டைமான்.

அதன் பின்னர் பேசிய இலங்கை கிராம அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், இலங்கை இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிப்பது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து உரையாடினோம். இது குறித்து புதுச்சேரி முதல்வர் சாதகமான பதிலை தெரிவித்துள்ளார். அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.

 

"காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கும்போது நிச்சயமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் சுற்றுலாத்துறை, சமய நிகழ்வுகள், மருத்துவத்துறை உள்ளிட்ட உறவுகள் மேம்படும். இரு நாட்டுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்," இவ்வாறு இலங்கை அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து