முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயனளிக்காத ஹோல்டரின் முயற்சி: ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது ஐதராபாத்

ஞாயிற்றுக்கிழமை, 26 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சார்ஜா: பேட்டங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஜேசன் ஹோல்டரின் முயற்சி ஐதராபாத் அணிக்கு எந்தவிதத்திலும் பலனளிக்கவில்லை. பஞ்சாப் அணியுடனான தோல்வியால் ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். இனி வரும் போட்டிகளில் வெற்றிப் பெற்றாலும் அந்த அணிக்கு பயனில்லை.

37-வது லீக் ஆட்டம்...

ஐ.பி.எல் 2021 சீசனுக்கான 37-வது லீக் ஆட்டம் சார்ஜா மைதானத்தில் நடந்தது இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அதகளப்படுத்தினார். இருப்பினும் ஐதராபாத் அணியால் போட்டியை வெல்ல முடியவில்லை.

ஐதராபாத் பந்துவீச்சு...

டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் என இரு முக்கிய பேட்ஸ்மென்களையும் தன் 4-வது ஓவரில் வீழித்தி பெவிலியன் அனுப்பினார் ஜேசன் ஹோல்டர்.

125 ரன்கள்... 

அடுத்து வந்த க்ரிஸ் கெயிலை ரஷீத் கானும், கொஞ்சம் பஞ்சாப் அணியின் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்துக் கொண்டிருந்த ஏய்டன் மக்ரமை அப்துல் சமத்தும் வீழ்த்தினர்.பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களான நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா ஆகியோரையும் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் நிலை பெறவிடாமல் வீழ்த்தினர். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை மட்டுமே குவித்திருந்தது பஞ்சாப்.

3 விக்கெட்கள்...

ஐதராபாத்தின் பந்துவீச்சாளர்களில் ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களுக்கு 19 ரன்களை மட்டும் கொடுத்து கே எல் ராகுல், மயங்க் அகர்வால், தீபக் ஹூடா என 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். சந்தீப் ஷர்மா, புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், அப்துல் சமத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஆரம்பமே சொதப்பல்...

126 ரன்களைக் குவித்தால் வெற்றி என்கிற எளிய இலக்கோடு களமிறங்கிய ஐதராபாத்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களான டேவிட் வார்னர் (2 ரன்கள்), கேன் வில்லியம்சன் (1 ரன்), ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். கடந்த முறை டெல்லிக்கு எதிரான போட்டியிலும் டேவிட் வார்னர் வெகு சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

விரித்திமான்...  

விரித்திமான் சாஹா மட்டுமே 37 பந்துக்கு 31 ரன்களை அடித்து ஐதராபாத் அணியை நிலை பெறச் செய்தார். மணீஷ் பாண்டே (13 ரன்கள்) , கேதர் ஜாதவ் (12 ரன்கள்), அப்துல் சமத் (1 ரன்) ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களும் நிலைபெற்று ரன் குவிப்பில் இறங்கவில்லை.

பேட்டிங் அபாரம்...

14-வது ஓவரில் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் தான் ஐதராபாத்தின் ரன் ரேட்டை அதிகரிக்கத் தொடங்கினார். 29 பந்துகளில் 47 ரன்களைக் குவித்தார். இதில் 5 சிக்ஸர்கள் அடக்கம். கடைசி வரை தன் விக்கெட்டையும் பறிகொடுக்காமல் விளையாடி ஐதராபாத்தை ஒரு கெளரவமான ஸ்கோருக்கு நகர்த்தினார் ஜேசன் ஹோல்டர்.

120 ரன்கள் மட்டுமே...

ஐதராபாத்தின் பேட்ஸ்மென்கள் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல் நிறைய பந்துகளையும் வீணடித்தனர். இந்த போட்டியில் ஜேசன் ஹோல்டர், கேதர் ஜாதவ் தவிர ஐதராபாத் அணியில் யாருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் 85 சதவீதத்துக்கு மேல் இல்லை. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ஐதராபாத்தால் 120 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

பஞ்சாப் வெற்றி...

இறுதியில், ஐதராபாத் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹோல்டர் 47 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும்.

மொகமத் ஷமி...

பஞ்சாபின் அனுபவமிக்க பந்துவீச்சாளரான மொகமத் ஷமி, டேவிட் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சனின் விக்கெட்டுகளை வீழ்த்தி டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களை பெவிலியன் அனுப்பினார். மணீஷ் பாண்டே, கேதர் ஜதவ், அப்துல் சமத் என ஐதராபாத்தின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களை பிட்சிலிருந்து வெளியேற்றினார் ரவி பிஷ்னோய்.

பஞ்சாப் பந்துவீச்சு...

ராஜஸ்தான் உடனான போட்டியில் 5 விக்கேடுகளை வீழ்த்திய அர்ஷ்தீப், இப்போட்டியில் விரித்திமான் சாஹாவின் விக்கெட்டை வீழ்த்தி பஞ்சாபின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தார். 125 என்கிற குறைந்த ஸ்கோரை மட்டுமே அடித்திருந்தாலும், அதை திறம்பட டிஃபெண்ட் செய்ததில் பஞ்சாபின் இந்த மூன்று பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

குறைந்த ஸ்கோர்...

ஷார்ஜாவில் அடிக்கப்பட்ட மிகக் குறைவான ஸ்கோர், அந்த குறைவான ஸ்கோரையும் சேஸிங் செய்ய முடியாமல் தோல்வி அடைந்த முதல் அணி சன்ரைசர்ஸ் அணியாகும்.

5-வது இடத்தில்...

இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்திருக்கிறது. ஐதராபாத் அணி கடைசி இடத்திலேயே தொடர்கிறது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இதுவரை 10 போட்டிகளில் 4 வெற்றிகள், 6 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.

BOX - 1

வெளியேறியது சன்ரைசர்ஸ்

சன்ரைசர்ஸ் அணிக்கு கடந்த 9 போட்டிகளில் இது 8-வது தோல்வியாகும். ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பிலிருந்து சன்ரைசர்ஸ் அணி வெளியேறிவிட்டது. இனிமேல் அடுத்துவரும் போட்டிகள் அனைத்திலும் வென்றாலும் ப்ளே ஆஃப் செல்வது கடினம். இனிவரும் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி பெறும் வெற்றிகள் எந்த விதத்திலும் உதவாது, ஆனால், மற்ற அணிகளின் ப்ளேஆஃப் சுற்றைப் பாதிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து